Wednesday, July 19, 2006

வேண்டுவன

எல்லைக்கோடுகள் இல்லாத
பூமி வேண்டும்

எழுத்தறிவில்லாதவர்
இல்லாமல் வேண்டும்

வறியவர் வாழ்க்கை
வளம்பெற வேண்டும்

வானம் எங்கள்
வசமாக வேண்டும்

டீக்கடை பெஞ்சுகள்
ஒழிந்திட வேண்டும்

தீவிரவாதிகள்
அழிந்திட வேண்டும்

நிறவெறி இல்லாத
மனிதர்கள் வேண்டும்

மதவெறி இல்லாத
சமூகங்கள் வேண்டும்

நதிநீர் எல்லாம்
நாட்டுடமையாக வேண்டும்

நாளெல்லாம் உழைத்திடும்
நல்லுடல் வேண்டும்

நீதி வழுவா
அரசொன்று வேண்டும்

நிம்மதியாய் மக்கள்
வாழ்ந்திட வேண்டும்

நித்திய இளமை
நான் பெற வேண்டும்

நீர்வீழ்ச்சியின் வேகம்
எனக்குள் வேண்டும்...

Monday, July 17, 2006

இறைவனிடம் ஓரு கேள்வி

பூவிற்குள்
நறுமணத்தை
புதைத்து வைத்தாய்

மண்ணுக்குள்
வளத்தை
நிறைத்து வைத்தாய்

கற்களுக்குள்
கலையை
ஒளித்து வைத்தாய்

மேகங்களில்
மழையை
உறைத்து வைத்தாய்

நெருப்பினுள்
வெப்பத்தை
உருக்கி வைத்தாய்

காலச்சக்கரத்தினுள்
காவியங்களை
படைத்து வைத்தாய்

ஓசைகளில்
மொழிகளை
பரப்பி வைத்தாய்

கதிரவனுக்குள்
பிரபஞ்சத்தை
அடக்கி வைத்தாய்

அணுவிற்குள்
சக்தியை
அடைத்து வைத்தாய்

இத்தனையும்
வைத்த என் இறைவா!
மனிதனுக்குள்
மட்டும் ஏன்
மனிதத்தை வைக்க
மறந்து வைத்தாய்?

XEROX COPY

பெண்ணே!
நானும் ஒரு
Xerox Machine தான்

கண்களால்
உன்னை பிரதி
எடுத்துவிட்டேன்

நகல்கள்
எல்லாம் கவிதைகளாய்....

என் காதல்

மலருக்குள்
உறைந்திருக்கும்
மதுவைப்போல்

உன் மனதிற்குள்
மறைந்திருப்பதுதானடி
என் காதல்

நிலவும் நானும்

அமாவாசை
வானமாய்
இருந்தேனடி நான்

உன் காதலால்
வளர்பிறையானேன்

நிறைமதியாய்
நிறைவு பெறுவது
எப்போது?

அதுவரை
உள்ளங்கையில்
உள்ளத்தை தாங்கி
உனக்காக
காத்திருப்பேன்

காதல்

காதல் ஓரு
அழகிய
ரோஜாச்செடி

இதில் பூப்பறித்து
புன்னகைத்தவர் சிலர்.

முள் தைத்து
மதி கெட்டவரோ பலர்.

வறுமை

தாய்க் கொடுத்த
அன்புசெல்வம்

தந்தைக் கொடுத்த
அறிவுசெல்வம்

குருக் கொடுத்த
கல்விசெல்வம்

இயற்கை கொடுத்த
வளமான செல்வங்கள்

இவற்றையும் மீறி
இந்த திருநாட்டில் வறுமை

ஊழ்வினை உறுத்து
வந்து ஊட்டியதல்ல

இங்குள்ளவர் மனவினை
உறுத்தாததால் வந்தது

பொதுவுடமை என்று
தத்துவம் பேசி
பொதுமக்கள் உடைமைகளை
தம்முடைமையாக்கிய
மனிதப்பதர்கள் தந்தது

விதைப்போம்
வளர்ச்சி விதைகளை
வேரறுப்போம்
ஊழல் களைகளை!

நிச்சயம் ஒருநாள்
இந்த தேசம்
செல்வத்திளைத்திருக்கும்..

மதம்

பள்ளி சேர்க்கை
விண்ணப்ப படிவத்தில்
நிரப்ப வேண்டிய
ஒரு பகுதி...
மதம்?

தன் தந்தை
எந்த மதம்
என்று தெரியாமல்
விழித்தான்
அந்த விலைமாதுவின் மகன்...

காலத்தின் நம்பிக்கைத் துரோகம்

கால் நூற்றாண்டாய்
காத்திருக்கிறொம்
விடியலுக்காக...
விடுதலைக்காக...

எங்கள் பூமியை
நீர் சூழ்ந்திருப்பதனால்தான் என்னவோ
எங்கள் நம்பிக்கைகளும்
நீர்த்துப் போய்விட்டன

நிலுவையில் உள்ள எங்கள்
நிம்மதி
நிர்மூலம் ஆனதுதான்
நிதர்சனம்

போரினால்
புண்பட்ட எங்கள்
பூமி
பண்படுவது எந்நாளோ?

துவண்டு போயின
எங்கள் உள்ளங்கள்
காலமே!
நீ செய்த
நம்பிக்கைத் துரோகத்தால்...

பிறவி அகதி

யாழ்ப்பாணம்...
நடுநிசி நேரம்...
அவளுக்கோ நிறைமாதம்...

குண்டுவீச்சில் இறந்த
கணவன் நினைவால்
கண்ணோரம் ஈரம்...

கையில் இருந்ததெல்லாம்
கொடுத்து விசைப்படகேறினாள்.

வைகறையில்
இந்திய எல்லையில்
ஒரு மணற்திட்டில்...

விடிந்ததும்
இந்திய கடற்படை
உதவியுடன்
மண்டபம் அகதிகள் முகாமில்...

அங்கேசுகப்பிரசவம்...
பெற்றெடுத்தாள்
ஒரு அழகியஆண்பிள்ளையை
பிறக்கும்போதே அகதியாய்...

ஈன்றப்பொழுதே
துடிதுடித்தாள்
தன் மகனை
அகதி எனக் கேட்டத்தாய்...