Wednesday, June 04, 2008

மதம் தின்னும் மனிதர்கள்

மனிதன் உயிர்வளர்க்க
உணவும் நீரும் போதுமே!
எதை வளர்க்க
மதத்தை நீ
தினமும் புசிக்கிறாய்?

Thursday, July 26, 2007

கவிதையின் காதலன்

ஆம் என்னவளும்
ஒரு கவிதைதான்

காமுறுவதில்
இலக்கணமில்லா
புதுக்கவிதை அவள்

பண்பினிலோ
தொல்க்காப்பிய நெறியினில்
வந்த இலக்கியம் அவள்

வள்ளுவன் எழுத
மறந்த ஒரு
ஹைக்கூ அவள்

Thursday, October 05, 2006

முரண்பாடுகள்

ஒருப்பக்கம்
தகவல் தொடர்புத்துறையில்
பெரும்புரட்சி
மறுபக்கம்
விவசாயிகளின் தற்கொலை
வறுமை,வறட்சி...

அணு ஆயுதத் தொழில்நுட்பத்தில்
சரித்திரம் படைக்கும்
வல்லரசு
கண்ணுக்குத் தெரியாத
வறுமைக்கோட்டை அழிக்க முடியாமல்
தவிக்கிறதே
இந்த குடியரசு

நாட்டின்
அன்னிய செலவாணியோ
பலகோடி
நடைப்பாதையில்
வாழ்பவர்களும்
இருக்கிறார்கள்
சிலகோடி

எல்லையில்
எதிரியை நோக்கி
தினமும் கேட்கும்
சிங்கத்தின் கர்ஜனை
உள்நாட்டிலோ
மாநிலங்களுக்கிடையே
நதிநீர்ப் பிரச்சினை

ஆம்
முரண்பாடுகளின்
மொத்த உருவம்தான்
என் இந்தியத் திருநாடு
ஆயினும்
நாட்டை நேசிப்பதில்
நாங்கள் முரண்படுவதில்லை...

எனக்குள் பாரதி

தெருவோர பிச்சைகாரர்களை
காணும்பொழுது...
வேலை செல்லும் சிறார்களை
காணும்பொழுது...
சாதித்தலைவர்களின் அறிக்கைகளை
படிக்கும்பொழுது...
ஒழுக்கம் கெட்டவர்களை
சந்திக்கும்பொழுது...
சோம்பேறிகளை
காணும்பொழுது...
பெண்களை துன்புறுத்துபவரை
காணும்பொழுது...
நாட்டுப்பற்று இல்லாரை
காணும்பொழுது...

நானும் பாரதியாவேன்

Thursday, September 28, 2006

இயற்கையின் குமுறல்

மனிதா!

நீ இயற்கை அன்னையின்
இதயத்தைப் பிளந்தாய்
ஆழ்துளை கிணறுகள் தோண்டி
அவள் உதிரத்தை உறிஞ்சினாய்

பூச்சிகொல்லி மருந்துகளை
அவள் மேனியில்
மூச்சுமுட்ட தூவி
அவளை மூச்சைத் திணறடித்தாய்

காலங்காலமாய் பொறுத்தவள்
உள்ளம் குமுறினாள்
அந்தக் குமுறல்தான்
இன்று சுனாமியாய்
நிலநடுக்கமாய்
உன்னைக் குமுறச்செய்கிறது.

நீ அவளைப் போற்றி வந்தால்
அவள் உன்னைக் காத்து நிற்பாள்...

Monday, September 25, 2006

வறுமையின் நிறம்

சுட்டெரிக்கும் வெயில்
ஏளனப்பார்வை வீசும்
கடை ஊழியர்

"நியாய விலைக்கடை"
எனும் நீலநிறப் பலகையின்கீழ்
அளவு குறைந்தாலும்
பரவாயில்லை
கிடைத்தால் போதும்
என்ற எண்ணத்துடன்
நீலநிற மண்ணெண்ணைக்காக
நீண்ட வரிசையில்
காத்திருக்கும் வறியவர்க் கூட்டம்

என் பார்வையில்
வறுமையின் நிறம் நீலம்

Thursday, August 24, 2006

உன் விழிகள்....

மௌனமெனும்
தேவமொழியின்
எழுத்து வடிவம்தான்
உன் விழிகளோ!

Tuesday, August 22, 2006

மோகம்

உள்ளமெனும்
பால் குடத்தில்
ஒருதுளி நஞ்சாய்
மோகம்

மெல்ல அது
ரத்தநாளங்களில்
பரவ
எனது யாக்கை
எனக்கே எதிரியானது

மோகத்தை கொன்றுவிடு
அல்லல் எந்தன்
மூச்சை நிறுத்திவிடு என
பாரதி வேண்டியதின்
ரகசியம் புரிந்தது